டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 20 வரை நீட்டிப்பு
கலால் ஊழல் வழக்கில், மத்திய புலனாய்வுத் துறையால் (சிபிஐ) கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் வியாழக் கிழமை (ஆகஸ்ட் 8) அன்று உத்தரவிட்டுள்ளது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா நீட்டித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையை ஆகஸ்ட் 12ஆம் தேதி நீதிமன்றம் பரிசீலிக்கும் என்று தெரிகிறது.
அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால்
முன்னதாக, ஜூன் மாதம் அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய நீதிபதி, அவரது பெயர் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும் கூறினார். அமலாக்க இயக்குனரகம் (ED) தாக்கல் செய்த பணமோசடி வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 26 அன்று திகார் சிறையில் இருந்து சிபிஐயால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த், கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜூலை 12-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கிய போதிலும், அவர் ஜாமீன் பத்திரத்தை வழங்காததால், வழக்கு தொடர்பாக அவர் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.