போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவின் காற்றை விட 12 மடங்கு மோசமானது டெல்லியின் காற்று மாசு
அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடர்ந்து ஒரு மாதமாக தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் காசா பகுதியின் காற்றை விட டெல்லி காற்றின் தரம் 12 மடங்கு மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5வது நாளாக தொடர்ந்து டெல்லி காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 7.30 மணிக்கு டெல்லி காற்றின் தரம் 483 AQIவாக இருந்த நிலையில், இன்று அது 488 AQIவாக அதிகரித்துள்ளது. வெடிகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியின் காற்றின் தரம் 39 AQIவாக உள்ளது. இது 'சாதாரண காற்றின் தரம்' என்பதற்கு கீழ் வருகிறது. AQI என்பது காற்றின் தரக் குறியீடாகும்.
நவம்பர் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடல்
ஆனால், டெல்லியின் உள்ள காற்றின் தரம் 'மிகவும் மோசமானது' என்ற வகைக்கு கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், புது டெல்லியில் நச்சு தன்மை கொண்ட மாசு, மூடுபனி போல் நகரம் முழுவதையும் சூழ்ந்துள்ளது. இதனால், டெல்லியில் வசிப்பவர்களில் பலருக்கு கண்களில் எரிச்சல் மற்றும் தொண்டை அரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 10 மற்றும் 12 ஆம் வகுப்பினரை தவிர பிற பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 10 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக பணியாளர்களும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை நகரில் கட்டுமான பணிகள் எதுவும் நடைபெற கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.