ஐஎம்எப்பை விட அதிகமாவே கொடுத்திருப்போம்; பாகிஸ்தானை கிண்டல் செய்த ராஜ்நாத் சிங்
இந்தியாவுடன் நட்புறவைப் பேணியிருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) கோருவதை விட, பாகிஸ்தானுக்கு இந்தியா அதிக நிதியை வழங்கியிருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) அண்டை நாடான பாகிஸ்தானை கிண்டல் செய்தார். ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தின் குரேஸ் சட்டமன்றப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ராஜ்நாத் பேசினார். அப்போது 2014-15இல் பிரதமர் மோடி அறிவித்த ஜம்மு-காஷ்மீருக்கான மேம்பாட்டுத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், "2014-15இல் மோடி ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்தார். அது இப்போது ரூ.90,000 கோடியை எட்டியுள்ளது. அந்தத் தொகை பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் கோருவதை விட அதிகமாகும்." என்று தெரிவித்தார்.
வாஜ்பாயின் கருத்தை நினைவுகூர்ந்த ராஜ்நாத் சிங்
நண்பர்களை மாற்றலாம் ஆனால் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூறியதையும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "பாகிஸ்தானிய நண்பர்களே, ஏன் உறவில் விரிசல் ஏற்பட்டது? நாங்கள் அண்டை நாடுகளாக இருக்கிறோம். நல்ல உறவில் இருந்திருந்தால், ஐஎம்எப்பை விட அதிகப் பணம் கொடுத்திருப்போம்." என்று அவர் மேலும் கூறினார். மற்ற நாடுகள் மற்றும் ஐஎம்எப் வழங்கும் நிதியுதவியை பாகிஸ்தான் நீண்ட காலமாக தவறாக பயன்படுத்தி வருவதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார். வாஜ்பாயின் கனவை வலியுறுத்திய ராஜ்நாத் சிங், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாஜ்பாயின் "இன்சானியத், ஜம்ஹூரியத் மற்றும் காஷ்மீரியத்" கனவு நிறைவேறும் போது காஷ்மீர் மீண்டும் சொர்க்கமாக மாறும் என்றார்.