சட்டம் பேசுவோம்: டீப்ஃபேக் வீடியோக்களுக்கு எதிரான இந்திய சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோரின் டீப்ஃபேக் வீடியோக்கள் நவீன பெண்களை பீதியடைய செய்திருக்கும் நிலையில், டீப்ஃபேக் போன்ற சைபர் குற்றங்களுக்கு எதிரான இந்திய சட்டங்களை பற்றி தெரிந்துகொள்வது அவசியம். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரு புகைப்படம்/வீடியோவில் இருக்கும் நபரின் முகத்தை நீக்கிவிட்டு மற்றோரின் முகத்தை நேர்த்தியாக பொருத்துவது டீப்ஃபேக் தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் ராஷ்மிகா மந்தனா மற்றும் கத்ரீனா கைஃப் போன்றவர்களை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோக்கள் இணையத்தில் சமீபத்தில் வைரலாகியது. இந்நிலையில், இது போன்ற குற்றங்களுக்கு எதிரான இந்திய சட்டங்களை இப்போது பார்க்கலாம்.
தனியுரிமைச் சட்டங்கள்
ஒருவரது அனுமதி இல்லாமல் அவரது முகத்தை அல்லது படங்களை தவறாக சித்தரிக்க பயன்படுத்தினால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் அதன் விதிகளின் படி குற்றமாகும். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் சட்டப்பிரிவு 66 டி, தொழில்நுட்பம் அல்லது கணினியை பயன்படுத்தி ஒருவரை ஏமாற்றும் குற்றத்திற்கான தண்டனையைக் கையாள்கிறது. இந்த விதியின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 1 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
சமூக ஊடக தளங்களில் தனியுரிமை
தகவல் தொழில்நுட்ப இடைநிலை 3(1)(b)(vii) விதியின் கீழ் தான், நாம் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யும் போது, தனியுரிமை கொள்கை மற்றும் பயனர் ஒப்பந்தம் போன்ற உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்கிறோம். சமூக வலைத்தள தனியுரிமை கொள்கைகளின் படி, மற்றவரை பொய்யாக/ஆபாசமாக சித்தரிப்பது, ஆள்மாறாட்டம் செய்வது, மற்றவர்களின் புகைப்படங்களையோ முகங்களையோ பயன்படுத்துவது ஆகியவை தவறாகும். இந்த விதியின் கீழ், ஒரு நபரின் தனியுரிமை பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் பொறுப்பு சமூக வலைத்தளங்களுக்கு உள்ளது. எனவே, இது போன்ற புகார்களை பெற்றதில் இருந்து 24 மணிநேரத்திற்குள் அந்த புகைப்படத்தை/வீடீயோவை முடக்க/நீக்க வேண்டிய கட்டாயம் சமூக வலைத்தளங்களுக்கு உள்ளது.
அவதூறு
இந்திய தண்டனைச் சட்டத்தின்(ஐபிசி) பிரிவு 499 மற்றும் 500 அவதூறு பரப்புவதற்கு எதிரான விதிகளைக் கொண்டுள்ளது. தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் ஒருவரின் நற்பெயருக்குக் கேடு விளைவிக்கும் நோக்கத்துடன் டீப்ஃபேக் வீடியோ உருவாக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட நபர், அந்த வீடியோவை உருவாக்கியவருக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரலாம்.
சைபர் கிரைம்
தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிகள், அனுமதியில்லாமல் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்துவது, டேட்டா திருட்டு மற்றும் சைபர் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வகையான சைபர் குற்றங்களை உள்ளடக்கியது. ஹேக்கிங் அல்லது டேட்டா திருட்டு போன்ற சட்டவிரோத முறைகள் மூலம் டீப்ஃபேக் வீடியோக்கள் உருவாக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தச் சட்டத்தின் கீழ் உதவி கிடைக்கும்.
மறக்கப்படுவதற்கான உரிமை
இந்தியாவில் "மறக்கப்படுவதற்கான உரிமை" என்ற சட்டங்கள் எதுவும் இல்லை என்றாலும், தனிநபர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், டீப்ஃபேக் வீடியோக்கள் போன்றவைகளை இணையத்தில் இருந்து அகற்றக் கோரி நீதிமன்றங்களை அணுகலாம். தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்புக் கொள்கைகளின் அடிப்படையில் இத்தகைய கோரிக்கைகளை நீதிமன்றங்கள் பரிசீலிக்கும்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள்
உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்கள்/ புகைப்படங்கள் நுகர்வோருக்கு தீங்கு விளைவிக்கும் மோசடி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட நபர்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019 போன்ற பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் நிவாரணம் பெறலாம். இந்தச் சட்டம் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நுகர்வோருக்கு எதிராக மோசடி நடக்கும் சந்தர்ப்பங்களில் இது பயன்படுத்தப்படலாம்.