'மரணம் தவிர்க்க முடியாதது, விதியிலிருந்து யாரும் தப்ப முடியாது': ஹத்ராஸ் நெரிசலில் இறந்தவர்கள் குறித்து போலே பாபா
ஹத்ராஸ் கூட்ட நெரிசலின் காரணமாக 121 உயிர்களைப் பலிகொண்ட விவகாரத்தால், தான் ஆழ்ந்த மனச்சோர்வில் இருப்பதாக போலே பாபா என்று அழைக்கப்படும் மத போதகர் கூறியுள்ளார். தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், தலைவிதியை யாராலும் தவிர்க்க முடியாது என்றும், இறப்பை தடுக்க முடியாது என்றும் கூறினார். "ஒவ்வொருவரும் ஒரு நாள் இறக்க வேண்டும், நேரம் மட்டுமே உறுதி,"என்று அவர் கூறினார். ஹத்ராஸ் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த அவர்,"ஜூலை 2ம் தேதி நடந்த சம்பவத்திற்குப் பிறகு நாங்கள் ஆழ்ந்த மன உளைச்சலில் இருக்கிறோம். மன உளைச்சலுக்கு ஆளாகிறோம், ஆனால் விதியைத் தவிர்க்க யாரால் முடியும்? யார் வந்தாலும் விரைவில் அல்லது தாமதமாக ஒரு நாள் (உலகை) விட்டு போக வேண்டும்" எனத்தெரிவித்துள்ளார்.
கூட்ட நெரிசலும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மரணங்களும் சதி என்கிறார் சாமியார்
கூட்டத்தினர் மீது விஷம் தெளிக்கப்பட்டதை நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை ஒப்புக்கொண்ட அவர், கூட்ட நெரிசலுக்குப் பின்னால் ஒரு "சதி" இருப்பதாக பரிந்துரைத்தார். தனது அமைப்பினால் நடத்தப்படும் ஆன்மீக நடைமுறைகளை சிலர் இழிவுபடுத்த முயற்சிப்பதாக அவர் வலியுறுத்தினார். இந்த சோகமான சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதிகாரர்களை அம்பலப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி), நீதித்துறை ஆணையம் மற்றும் மனித நல நல்லிணக்க சங்கத்தின் ஆதரவாளர்கள் மீது முழு நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார். "இந்த சம்பவத்தில் இறந்த அனைவரின் குடும்பத்தினருடனும் நாங்கள் நிற்கிறோம்" என்று போலே பாபா கூறினார். சிக்கந்தராவ் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-இல் இந்த பாபா பெயர் குற்றவாளியாக குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.