
ஏர் இந்தியா விமானத்திற்காக அவசரநிலை பிரகடனம்: என்ன நடந்தது
செய்தி முன்னோட்டம்
வால் பகுதியில் அடிபட்டதை அடுத்து, கோழிக்கோடில் இருந்து தம்மம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானம், இன்று(பிப்-24) திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டது.
கோழிக்கோடில் இருந்து கிளம்பும் போது ஓடுபாதையில் விமானத்தின் வால் பகுதி அடிபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக ஏர் இந்தியா ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
அந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
"திருவனந்தபுரத்தில் பயணிகளின் அனைத்து தேவைகளையும் விமான ஊழியர்கள் கவனித்து வருகின்றனர்" என்று ஏர்-இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டிருந்தது.
ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்(IX-385), 168 பயணிகளுடன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டவுடன் இந்த அவசரநிலை திரும்ப பெறப்பட்டது.
கேரளா
மற்ற விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன: அதிகாரிகள்
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் அதானி குழுமம், கோழிக்கோடு விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததுமே விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
"11.36 மணியளவில் நாங்கள் விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்தோம். மேலும, அனைத்து அவசர சேவைகளும் உடனடியாக எச்சரிக்கப்பட்டது." என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வண்டி போன்றவை விமான நிலையத்தில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ததுடன், விமான நிலையத்தின் அவசர கதவுகளும் திறக்கப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ்காரர்களை ஏற்றிச் செல்லும் மூன்று பேருந்துகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
"இருப்பினும், மற்ற விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன." என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.