மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மோக்கா புயல் மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை(NDRF) மேற்கு வங்கத்திற்கு 8 குழுக்களையும் 200 மீட்புப் பணியாளர்களையும் அனுப்பியுள்ளது.
"நாங்கள் எட்டு குழுக்கள் மற்றும் 200 மீட்புப் பணியாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளோம். மேலும் 100 மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்" என்று NDRFஇன் 2வது பட்டாலியன் கமாண்டன்ட் குர்மிந்தர் சிங் கூறினார்.
இந்திய கடலோர காவல்படையும்(ICG) மேற்கு வங்கத்தில் உள்ள தனது பிரிவுகளை அதிக உஷார் நிலையில் வைத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமைக்குள் மோக்கா புயல் படிப்படியாக தீவிரமடைந்து தீவிர புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.
details
அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது
இந்த மோக்கா புயல் பங்களாதேஷ்-மியான்மர் எல்லையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கரையை கடக்கும் போது, மணிக்கு 150-160 கிமீ வேகத்தில் காற்று வீசுக்ககூடும்.
காக்ஸ் பஜார் அருகே பங்களாதேஷின் தாழ்வான கடலோரப் பகுதியில் 1.5-2 மீட்டர் அளவுக்கு புயல் எழும் என்று IMD கணித்துள்ளது.
மீனவர்கள் மற்றும் பயணிகள் மத்திய/வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், இயற்கை பேரிடர்களை கையாள அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தமான் நிக்கோபார், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யக்கூடும்.