Loading...
வங்கக்கடலில் அர்னாப் புயல்: இன்று நீலகிரிக்கும் நாளை 3 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் அர்னாப் புயல்: இன்று நீலகிரிக்கும் நாளை 3 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்

எழுதியவர் Vasuki
Oct 24, 2026
05:30 pm

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறவுள்ள நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் இன்று நீலகிரி மாவட்டத்திற்கும், நாளை தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிழக்கு-மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த அமைப்புக்கு அர்னாப் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு நேரடிப் புயல் பாதிப்புகள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், இருப்பினும் இதன் தாக்கத்தால் பரவலாகக் கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா நோக்கி 

புயல் உருவாவதும் நகரும் பாதையும்

கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 25-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 26-ஆம் தேதி காலையில் மேற்கு-மத்திய வங்கக்கடலில் அர்னாப் புயலாகவும் உருவெடுக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி இப்புயல் நகரக்கூடும் என்பதால் தமிழகத்திற்கு நேரடி அச்சுறுத்தல் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது.

ரெட் அலர்ட்

மாவட்டங்களுக்கான மழை எச்சரிக்கை 

புயல் சின்னம் காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 26-ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோயம்புத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT