கிரைம் ஸ்டோரி: கேரளாவில் 6 வயது சிறுமி கடத்தப்பட்டதில், கைதான மூன்று நபர்கள்; என்ன நடந்தது?
சென்ற வாரம், கேரளாவை பரபரபாக்கிய 6 வயது சிறுமி கடத்தல் விவகாரத்தில், 20 மணிநேரத்தில் குழந்தை மீட்கப்பட்டது. அதே நேரம், காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய நபர் குடும்பத்தோடு சிக்கியிருக்கிறார். 5 கோடி கடனை அடைக்க, குழந்தைகளை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்ட குடும்பத்தினர், வசமாக சிக்கிய சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் பத்மகுமார், அவரது மனைவி அனிதா குமாரி மற்றும் அவர்களது மகள், அனுபமா பத்மன் ஆகியோர். பல சிறு வேலைகளை செய்துவந்த பத்மகுமாரின் நிதி நிலைமை, கோவிட் காலத்திற்கு பிறகு மிகவும் மோசமடைய, கடத்தல் ஒன்றை செய்து, அதன் மூலம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்ற குழந்தை தேடலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
யூடியூபில் குறுக்கு வழியில் சம்பாதிப்பது பற்றி தேடிய குடும்பம்
இந்த கடத்தல் குடும்பமும் கொல்லம் மாநிலத்தை சேர்ந்தவர்களே. குறுக்கு வழியில் எளிதாக சம்பாதிப்பது எப்படி என இக்குடும்பம் யூடியூபில் தேடியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கடத்தப்பட்ட இந்த சிறுமியை ஏற்கனவே இரு முறை கடத்த திட்டமிட்டுள்ளது இக்குடும்பம் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இதில் பத்மகுமார் இன்ஜினியரிங் படித்தவர் என்பது கூடுதல் தகவல். இந்நிலையில், பத்மகுமாரின் மகள் உள்ளூர் யூட்யூப் பிரபலம் எனவும் தெரிவிக்கிறார்கள். மாதம் 3 முதல் 5 லட்சம் வரை சம்பாதித்து வந்ததாகவும் கூறுகிறார்கள். இருப்பினும் அவரின் சேனலும் முடக்கப்பட்டதால், வருவாய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பெற்றோரின் கடத்தல் திட்டத்திற்கு மகள் அனுபமா ஒத்துக்கொள்ளவில்லை என்றும், பின்னர் அவரும் வேறுவழியின்றி ஈடுபட்டுள்ளார்.
போலி நம்பர் பிளேட், நோ போன்
இருமுறை இக்குழந்தையை கடத்த திட்டமிட்ட குடும்பம், இரு முறையும் போலி நம்பர் பிளேட் தயார் செய்துள்ளது. காரில் நகரை வலம் வந்து, குழந்தையை தேர்வு செய்வதை வழக்கமாக வைத்திருந்த இந்த குடும்பம், நடுவழியில் நம்பர் பிளேட்களை மாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளது. அதேபோல, இந்த கடத்தல் தேடல் மற்றும் பயணம் முழுவதிலும், அலைபேசியில் பேசக்கூடாது என்பதை விதியாக வைத்துள்ளனர். இரு முறையும் அருகில் ஆட்கள் இருந்ததால், கடத்தலை கைவிட்டுள்ளனர். இறுதியாக கடந்த திங்கட்கிழமை, இந்த சிறுமியும் அவளது அண்ணனும் மட்டும் தனியாக இருப்பதை கண்ட இந்த கும்பல், சிறுவனை கீழே தள்ளி விட்டு, சிறுமியின் வாயை பொத்தி காரில் ஏற்றியுள்ளனர். அதன்பின்னர், சிறுமியை அவளுடைய தந்தையிடம் தான் கூட்டிசெல்வதாக கூறி அவளை சமாதானம் செய்துள்ளனர்
மளிகை கடையிலிருந்து போன்; அடையாளம் காட்டிய பக்கத்துக்கு வீடு பெண்மணி
கடத்தப்பட்ட சிறுமியை தங்களது வீட்டில், அனுபமாவிடம் விட்டுவிட்டு, அருகே இருந்த கடைக்கு சென்று மளிகை சாமான் வாங்குவது போல பாவித்து, மளிகை கடைக்காரர் போனில் இருந்து, சிறுமியின் தாயிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். கடத்தல்காரர்களின் அழைப்பை ரெகார்ட் செய்த காவல்துறையினர், அதை லோக்கல் டிவியில் ஒளிபரப்பியுள்ளனர். அதில் இந்த பெண்மணியின் குரலை, அவரது பக்கத்துக்கு வீடு பெண் அடையாளம் கண்டுள்ளார். உடனே அவர் காவல்துறையினரிடம் தெரிவிக்க, அனிதாவை குற்றவாளி என அடையாளம் கண்டுகொண்டனர் காவல்துறையினர்.
தென்காசி அருகே பிடிபட்ட கும்பல்
டிவியில் இந்த கடத்தல் செய்தி மிகவும் வைரலாவதை உணர்ந்த கடத்தல்காரர்கள், அந்த சிறுமியை திருப்பி அனுப்ப முடிவெடுத்து, மீண்டும் கொல்லம் நோக்கி காரில் சென்றுள்ளனர். பின்னர் ஒரு இடத்தில் காரை நிறுத்தி, ஆட்டோ மூலம் சிறுமியை கிரௌண்டிற்கு கொண்டு சென்று, யாரும் பார்க்காவண்ணம் இறக்கி விட்டுள்ளனர். இதை தொடர்ந்து இக்கும்பல் தென்காசியில் அவர்கள் நண்பர்கள் தோட்டம் ஒன்று இருப்பதாகவும், அங்கு சென்று சில காலம் தலைமறைவாக இருக்க முடிவெடுத்திருந்தனர். இந்த நிலையில் குழந்தையை மீட்ட காவல்துறையினர், இந்த கும்பல் தென்காசி தப்பி செல்வதை உணர்ந்து, அங்கு சென்று அவர்களை மடக்கி பிடித்து, கைது செய்துள்ளது