இந்தியாவில் 349 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் XBB1.16 கொரோனா வகை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், XBB1.16 என்ற கொரோனா வகை 349 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவே கொரோனா அதிகரித்து வருவதற்கு காரணமாக இருக்கலாம் என்று SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) தரவுகள் கூறுகின்றன. INSACOG தரவுகளின்படி, அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 105 கொரோனா(XBB1.16) பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் 93 பாதிப்புகள், கர்நாடகாவில் 61 பாதிப்புகள் மற்றும் குஜராத்தில் 54 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மிக வேகமாக பரவும் தொற்றுநோய்
மிக வேகமாக பரவும் தொற்றுநோயாகக் கருதப்படும் XBB 1.16 கொரோனா மாறுபாடு, இந்தியாவில் முதன்முதலாக 2023 ஜனவரி மாதத்தில் கண்டறியப்பட்டது. அப்போது, இந்தியாவில் இருவர் இந்த வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். பிப்ரவரியில், 140 பேர் இதனால் பாதிக்கப்பட்டனர். மார்ச் மாதத்தில் 207 பாதிப்புகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா அதிவேகமாக பரவுவதாலும் அதிக தொற்றுகளை ஏற்படுத்துவதாலும் இதை பெரும் தொற்றாக மருத்துவர்கள் கருதுகின்றனர். SARS CoV 2 வைரஸின் ம்யுடண்ட் தான் இந்த XBB 1.16 கொரோனா என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.