கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியளவில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படும் 90% பேர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்னும் அதிர்ச்சி ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் இதன் பரவல் வேகமாக உள்ளது என்று தெரிகிறது. அதன்படி கடந்த மாதம் 479 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாத துவக்கத்தின் முதல் 8 நாட்களிலேயே 825 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நோய் தொற்று பரவாமல் தடுக்க மாநில அரசு அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தல்
இந்நிலையில் இது குறித்து அந்த மாநில மருத்துவர் ஒருவர் கூறியதாவது, சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனை நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுவாச கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் கொரோனா தொற்று பாதிப்பானது கண்டறியப்படுகிறது என்று கூறியுள்ளார். மேலும் அவர், கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், இது போன்ற வைரஸ் பரவல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் பொது இடங்களில் முக கவசத்தினை கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.