ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்
செய்தி முன்னோட்டம்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள CMS சர்வீசஸ் என்ற பண மேலாண்மை நிறுவனத்தில் கடந்த ஜூன் 10ஆம் தேதி ரூ.8½ கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
அப்போது, 12 ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் காவலர்களை மிரட்டி பணத்தை திருடிச் சென்றனர்.
இந்த திருட்டில் ஈடுபட்ட 9 பேரை ஏற்கனவே பஞ்சாப் போலீஸார் கைது செய்துவிட்ட நிலையில்,பல வழக்கில் தேடப்பட்டு வந்த மந்தீப் கவுர் மற்றும் அவரது கணவர் ஜஸ்விந்தர் சிங்கை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் இருவரும் தான் அந்த கொள்ளை கூட்டத்திற்கு தலைவர்கள் என்பது தெரிய வந்ததது.
மேலும், ஒவ்வொரு முறை கொள்ளையடித்த பின்னும் சீக்கிய கோவிலுக்கு செல்வது மந்தீப் கவுருக்கு வழக்கம் என்ற தகவலும் போலீஸாருக்கு கிடைத்தது.
பிபிஏ
இலவச ஜூஸ் பந்தல்களை கோவிலுக்குள் அமைத்த போலீஸார்
அந்த தம்பதியை வலைவிரித்து தேடி வந்த போலீஸார், அவர்கள் இருவரும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரபல சீக்கிய குருத்துவாரா கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதை தெரிந்து கொண்டனர்.
இதனையடுத்து, பஞ்சாப் போலீஸார் அந்த கோவிலுக்கு விரைந்தனர்.
ஆனால், கோவிலில் இருந்த பெண்கள் அனைவரும் முக்காடு போட்டு முகத்தை மறைத்திருந்ததால் அவர்களால் மந்தீப் கவுரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், விவேகத்துடன் சிந்தித்த காவல்துறையினர், இலவச ஜூஸ் பந்தல்களை கோவிலுக்குள் அமைத்து பக்தர்களுக்கு பானங்களை வழங்க தொடங்கினர்.
இதை அறியாத மந்தீப் கவுரும் அவரது கணவரும் இலவச பானத்தை குடிக்க அங்கு வந்தனர்.
பக்தர்களை தீவிரமாக கண்காணித்து கொண்டிருந்த போலீஸார், ஜூஸை குடிப்பதற்கு அவர்கள் முகத்திரையை அவிழ்த்தவுடன் அவர்கள் இருவரையும் அங்கேயே கைது செய்தனர்.