மணிப்பூரில் தொடரும் வன்முறை: அமித்ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்
செய்தி முன்னோட்டம்
மணிப்பூரில் இன மோதல்களால் இதுவரை குறைந்தது 80 பேர் பலியாகியுள்ள நிலையில், நேற்று(மே 28) அங்கு புதிய கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில், ஒரு போலீஸ்காரர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.
அதிநவீன ஆயுதங்களை ஏந்திய பயங்கரவாதிகள், செரோ மற்றும் சுகுனு பகுதியில் பல வீடுகளுக்கு தீ வைத்ததை அடுத்து, மாநிலத்தின் பல பகுதிகளில் புதிய வன்முறைகள் வெடித்தன.
மணிப்பூர் மாநிலத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று செல்ல உள்ள நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநிலத்தின் முதல்வர் என்.பிரேன் சிங் நேற்று தெரிவித்தார்.
DETAILS
நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் நடைபெற்று வருகிறது: முதல்வர்
"பயங்கரவாதிகள் பொதுமக்களுக்கு எதிராக எம்-16 மற்றும் ஏகே-47 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர். பல கிராமங்களுக்கு புகுந்து அவர்கள் வீடுகளை எரித்தனர். ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளோம். 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன." என்று என்.பிரேன் சிங் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக இம்பால் பள்ளத்தாக்கின் புறநகர்ப் பகுதியில் பொதுமக்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது நன்கு திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மணிப்பூர் செல்ல இருக்கிறார்.