சர்ச்சைக்குரிய டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கும் மத்திய அரசு
டெல்லியில் அரசு அதிகாரிகளின் சேவைகளை கட்டுப்படுத்தும் மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய-அரசு அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இயங்கி வரும் டெல்லி அரசாங்கத்திற்கும், அதன் ஆளுநர் விகே.சக்சேனாவுக்கும் இடையே பல நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில், அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கும் இடமாற்றுவதற்கும் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பது குறித்து டெல்லி அரசு மற்றும் டெல்லி ஆளுநருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கே அதிகாரம் உள்ளது என்று கூறியது. இந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு சார்பாகவும், டெல்லியின் துணைநிலை ஆளுநரும் மத்திய அரசின் பிரதிநிதியுமான வி.கே.சக்சேனாவுக்கு எதிராகவும் வந்திருந்தது.
எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான மிகப்பெரிய மோதல்
இது நடந்து சில நாட்களுக்குள், ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு, அரசாங்க அதிகாரிகளை நியமிப்பதற்கும் இடமாற்றுவதற்கும் ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கியது. இதனால், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் அதிகாரம் பறிக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி போராடி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு அறிமுகப்படுத்திய அவசர சட்டத்தை நிரந்தரமாக்க இன்று நாடுளுமன்றத்தில் ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்ற செய்தி வெளியாகி உள்ளது. அப்படி, இந்த புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டால் INDIA எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக நிற்கும். இது எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான மிகப்பெரிய மோதல் என்பதால், இது அரசியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.