கொசு உற்பத்தி அதிகரிப்பு, தமிழக சுகாதார செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தமிழக சுகாதாரத் துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்துள்ளார். இதுகுறித்த மனுவில், "மழைக்காலங்களில் அதிகரிக்கும் கொசுக்கள் காரணமாக டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட பல நோய் தொற்றுகள் ஏற்படுகிறது" என்றும், "எனவே இந்த கொசுக்களை தொழில்நுட்பம் மற்றும் மருந்துகள் கொண்டு அழிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி கடந்த 2022ம் ஆண்டு அக்.,26ல் நடந்த இதுகுறித்து உயர்நீதிமன்றம் நடத்திய விசாரணையில், 'கொசுக்களை அழிக்க பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் உள்ள ரசாயனங்களால் வேறு நோய்கள் ஏற்படுவதன் காரணமாக சுகாதாரத்துறை பரிந்துரைப்படி சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாத கொசு மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
போதிய ஆவணங்களை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவு
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், 'தொடர்ந்து கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்' என்றுக்கூறி உத்தரவிட்டதாகவும் ரமேஷ் தற்போதைய நீதிமன்ற அவமதிப்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர், கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் தற்போது நோய் தொற்றும் அதிகரித்துள்ளது. இதனால் நீதிமன்ற உத்தரவினை நிறைவேற்றாத சுகாதாரத்துறை செயலர் மீதும், நகராட்சி குடிநீர் வழங்கல்துறை செயலர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், 'கொசு ஒழிப்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது' என்று கூறியுள்ளனர். மேலும்,'நீதிமன்றத்தின் உத்தரவை அரசு நிறைவேற்றியதா?இல்லையா? என்பதை உறுதிச்செய்யும் வகையில் மனுதாரர் வரும் நவ.,24ம்.,தேதிக்குள் போதிய ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.