கர்நாடகாவின் மிகப்பெரிய மாவட்டம் பெலகாவியை பிரிப்பது குறித்து ஆலோசனை
கர்நாடகா மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமான பெலகாவி மாவட்டத்தினை இரண்டாக பிரிப்பது குறித்து அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்திலேயே மிப்பெரிய பரப்பளவு கொண்ட அதாவது, 13,400 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட 2 மக்களவை தொகுதிகள், 18 சட்டப்பேரவை தொகுதிகள், 1 மக்களவை தொகுதியினை கொண்ட பாதி பகுதி உள்ளிட்டவைகளை கொண்டது பெலகாவி மாவட்டம். இந்நிலையில், இம்மாவட்டத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட பொறுப்பாளரான சதீஷ் ஜர்கிஹோலி பேசுகையில் பெலகாவி மாவட்டம் பிரிக்கப்படுவதற்கான திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் பரிந்துரை
அதன்படி சமீபத்தில் மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இம்மாவட்டத்தினை கோகக், சிக்கோடி மற்றும் பெலகாவி என மூன்று பிரிவுகளாக பிரிப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது இது குறித்த பரிந்துரையினை மாநில அரசு மிக தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இந்த மாவட்டத்தினை 3 மாவட்டமாக பிரித்தால் மேம்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி உடனடியே சென்றடையும், மக்களும் நிர்வாகத்தினை மிக எளிதாக அணுக முடியும். அதேபோல் மாவட்ட தலைமையகத்தினை அடைய மக்கள் 100ல் 200கி.மீ., வரை பயணிப்பதை தவிர்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகமும் மக்களுக்கான பணிகளை எளிதாக கொண்டு சேர்க்க முடியும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.