Loading...
அரசியலமைப்பு தினம் 2026: இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பதிவான தமிழகத்தின் அழியாத முத்திரைகள்
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பதிவான தமிழகத்தின் அழியாத முத்திரைகள்

அரசியலமைப்பு தினம் 2026: இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பதிவான தமிழகத்தின் அழியாத முத்திரைகள்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 26, 2026
10:18 am

செய்தி முன்னோட்டம்

இந்திய ஜனநாயகத்தின் ஆணிவேராகத் திகழும் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 77-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று நவம்பர் 26, 2026 அன்று நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு நிர்ணய சபையால் இந்த சட்டம் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது. முன்பு தேசிய சட்ட தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்நாள் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாள் 125 ஆவது ஆண்டு விழாவையொட்டி 2015 ஆம் ஆண்டு முதல் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அடிப்படை விழுமியங்களை போற்றும் நாளாக இது அமைந்துள்ளது.

அரசியலமைப்பின் சிறப்பு

உலகின் மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் கடின உழைப்பில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.

வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையும் சமூக நீதி சிந்தனையும் இந்த ஆவணத்தை செதுக்குவதில் முக்கியப் பங்காற்றின.

1949 நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 முதல் முழுமையாக நடைமுறைக்கு வந்து இந்தியாவை குடியரசாக மாற்றியது.

நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய நான்கு தூண்களே இந்திய அரசியலமைப்பின் முகப்புரையின் உயிர்நாடியாகத் திகழ்கின்றன.

அரசியலமைப்பு தினம் 2026

அரசியலமைப்பு தினம் 2026 கருப்பொருளும் நாடு தழுவிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும்

இந்த ஆண்டு அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் அம்பேத்கரின் அரசியலமைப்புத் தொலைநோக்கும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலமும் என்ற கருப்பொருளில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

மேலும் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் தமிழ் உள்ளிட்ட 22 அட்டவணை மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் அரசியலமைப்பின் முகப்புரையை வாசிக்கும் இணையவழி இயக்கம் நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள 786 மாவட்டங்களில் இளைஞர்களிடையே ஜனநாயகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில் விக்சித் பாரத் யுவ சம்வாத் விவாத அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தமிழக ஓவியங்கள்

அசல் அரசியலமைப்பு ஓவியங்களில் இடம்பெற்ற தமிழகக் கலையும் கலைஞரும்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் கையெழுத்துப் பிரதியில் நந்தலால் போஸ் தலைமையிலான கலைஞர்கள் வரைந்த 22 ஓவியங்களிலும் தமிழகத்தின் பெருமை மிளிர்கிறது.

இதில் சோழர் கால நடராஜர் சிலை மற்றும் மாமல்லபுரம் பல்லவர் கால புடைப்புச் சிற்பக் காட்சிகள் வரையப்பட்டுள்ளன.

மேலும் இந்தப் பணிகளில் பங்கேற்ற குழுவில் இடம்பெற்ற தமிழ்நாட்டின் அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த ஓவியர் ஏ.பெருமாள், புத்தர் வாழ்க்கைக் காட்சி மற்றும் பகுதி பத்தொன்பதில் இடம்பெற்றுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் ஓவியத்திலும் பங்காற்றியுள்ளார்.

ADVERTISEMENT

சட்டத்திருத்தம்

முதலாவது சட்டத்திருத்தம் முதல் 76-வது திருத்தம் வரை தமிழகம் ஏற்படுத்திய தாக்கம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தங்களின் வரலாற்றில் தமிழகம் தீர்மானகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

1951-ல் செண்பகம் துரைராஜன் வழக்கைத் தொடர்ந்து பெரியார், அண்ணா மற்றும் காமராஜர் ஆகியோரின் முன்னெடுப்பால் முதலாவது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு, பிரிவு 15(4) மூலம் இடஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மேலும் 1994-ல் கொண்டுவரப்பட்ட 76-வது சட்டத்திருத்தம் மூலம் தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டுச் சட்டம் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டதோடு, 1963-ஆம் ஆண்டின் பதினாறாவது சட்டத்திருத்தத்திற்கும் தமிழக அரசியல் இயக்கங்களே முக்கியக் காரணமாக அமைந்தன.

அழியாத முத்திரை

வரைவுக் குழுவிலும் நிர்ணய சபையிலும் பதிவான தமிழகத் தலைவர்களின் அழியாத முத்திரை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய வரலாற்றுப் பயணத்தில் தமிழகத் தலைவர்களின் பங்களிப்பு ஈடு இணையற்றதாகும்.

டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த என். கோபாலசாமி ஐயங்கார், டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஆகிய சட்ட மேதைகள் முக்கியப் பங்காற்றினர்.

மேலும் அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதங்களில் பெருந்தலைவர் காமராஜர், பி. கக்கன், சி. சுப்பிரமணியம், ஆர்.கே. சண்முகம் செட்டியார் மற்றும் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் மாநில உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தனர்.

ADVERTISEMENT