கர்நாடகாவில் காங்கிரஸ் 3 ராஜ்யசபா தொகுதிகளில் வெற்றி: குறுக்கு வாக்கு மூலம் பாஜக 1 தொகுதியில் வெற்றி
இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் மூன்று ராஜ்யசபா இடங்களை வென்றது. அதே நேரத்தில், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏ ஒருவர் குறுக்கு வாக்களித்ததால் பாரதிய ஜனதா கட்சியால்(பாஜக) ஒரு இடத்தை மட்டுமே பெற முடிந்தது. உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இன்று ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்களான அஜய் மக்கன், நாசர் உசேன் மற்றும் ஜி.சி. சந்திரசேகர் ஆகியோர் முறையே 47, 46 மற்றும் 46 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். மேலும், அவர்கள் இனி கர்நாடகாவின் ராஜ்யசபா எம்பிகளாக அவர்களது பதவி காலம் முடியும் வரை பணியாற்றுவார்கள்.
'தேர்தல் முடிவுகள் காங்கிரசின் ஒற்றுமையை காட்டுகிறது': டி.கே.சிவக்குமார்
பாஜக சார்பில் நாராயண பண்டிகே ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக எம்எல்ஏ எஸ்டி சோமசேகர் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கனுக்கு வாக்களித்ததாலும், மற்றொரு எம்எல்ஏ அர்பைல் சிவராம் ஹெப்பர் வாக்களிக்காமல் விட்டுவிட்டதாலும், கர்நாடகாவில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ராஜ்யசபா தேர்தல் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், இந்த முடிவுகள் காங்கிரசின் ஒற்றுமையை காட்டுவதாக கூறினார். "அனைத்து எம்எல்ஏக்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி. அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாக்காளர்கள், முதல்வர் மற்றும் கட்சித் தொண்டர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆகியோருக்கும் நன்றி." என்று அவர் மேலும் கூறினார்.