
யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங்கிற்கு தனி நினைவிடம் அமைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் யமுனை நதிக்கரையோரம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவிட அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி முறைப்படி வலியுறுத்தியுள்ளது.
ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி உட்பட பல முன்னாள் இந்தியப் பிரதமர்களின் நினைவுச்சின்னங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கட்சியின் கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.
அதே நேரத்தில் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் டிசம்பர் 27 அன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இதுகுறித்து முறையிட்டுள்ளனர். இந்த முறையீட்டிற்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை.
நினைவுச் சின்னம்
நினைவுச் சின்னம் குறித்த அரசின் நிலைப்பாடு
2013இல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசாங்கம், ராஜ்காட்டில் உள்ள ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தாலை, இட நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக ஒரு ஒருங்கிணைந்த நினைவிடமாக நிறுவியது.
காங்கிரஸ் அரசாங்கமே இந்த நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், அதற்கு முரணாக காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளது.
2013இல் எடுக்கப்பட்ட முடிவு தலைவர்களுக்கு தனிப்பட்ட நினைவுச்சின்னங்களை ஒதுக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை அரசு எடுக்க வைத்தது.
வியாழக்கிழமை (டிசம்பர் 26) இரவு மன்மோகன் சிங் காலமான நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதற்கிடையே, மன்மோகன் சிங் மரணத்திற்கு 2024 டிசம்பர் 26 முதல் ஜனவரி 1, 2025 வரை ஏழு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.