'இந்து மதத்தை சேர்ந்த அரசகர்களை மட்டுமே காங்கிரஸ் விமர்சிக்கிறது': பிரதமர் மோடி காட்டம்
இந்து மன்னர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அவரை கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்து மன்னர்களை அவமதித்ததாகவும், ஆனால், ஔரங்கசீப் போன்ற முஸ்லிம் ஆட்சியாளர்கள் செய்த அட்டூழியங்களுக்கு வாய் திறக்காமல் இருப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இதை தெரிவித்துள்ளார். "நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள் மற்றும் பாட்ஷாக்கள் செய்த அட்டூழியங்களைப் பற்றி ஷெஹ்சாதா(ராகுல் காந்தி) ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ..." என்று பிரதமர் கூறியுள்ளார். ஒரு வைரல் வீடியோவில் ராகுல் காந்தி கூறிய கருத்துக்களை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தியை கடுமையாக சாடிய பிரதமர் மோடி
"ராஜாக்கள் மற்றும் மஹாராஜாக்கள் ஆட்சியில், அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஒருவரின் நிலத்தை கூட அவர்கள் பறிக்கலாம். இந்நிலையில், காங்கிரஸ், நாட்டு மக்களுடன் இணைந்து இந்நாட்டின் சுதந்திரத்தை மீட்டு ஜனநாயகத்தை கொண்டு வந்தது." என்று அந்த வீடியோவில் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அது குறித்து இன்று பேசிய பிரதமர் மோடி, முஸ்லிம் ஆட்சியாளர்கள் செய்த அட்டூழியங்களுக்கு காங்கிரஸ் வாய் திறக்காமல் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். "ஔரங்கசீப் செய்த அட்டூழியங்கள் காங்கிரஸுக்கு நினைவில் இல்லை. அவுரங்கசீப்பைப் புகழ்ந்து பேசும் கட்சிகளுடன் காங்கிரஸ் அரசியல் கூட்டணி வைத்துள்ளது. நமது புனிதத் தலங்களை அழித்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், மக்களைக் கொன்றவர்கள், பசுக்களைக் கொன்றவர்கள் பற்றியெல்லாம் அவர்கள் பேசுவதில்லை." என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.