மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது காங்கிரஸ்
மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய், பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்வது என்பது மத்திய அரசின் பெரும்பான்மைக்கு எதிர்க்கட்சிகள் விடும் சவாலாகும். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பதவி விலக வேண்டி இருக்கும். இது முறையாக தாக்கல் செய்யப்பட்டிருந்தால், மக்களவை சபாநாயகர் அதை சபையில் வாசித்து காட்டுவார். பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவான உறுப்பினர்களை அவரவர் இடத்தில் எழுந்து நிற்குமாறு கேட்டுக் கொள்வார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 50 பேர் எழுந்து நிற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதறகான ஒரு உத்தி
இதற்கிடையில், பாரத ராஷ்டிர சமிதி(BRS) கட்சி தலைவர் நாகேஸ்வர ராவ்வும் ஒரு தனி நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகரிடம் தாக்கல் செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து, மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம், குறைவான வாக்குகள் பெற்று தோல்வியடையும் என்றாலும், மணிப்பூர் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டை போட்டு கருத்துப் போரில் வெற்றி பெறுவோம் என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன. இது பிரதமரை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதறகான ஒரு உத்தி என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. மேலும், 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.