3 முக்கியத் தலைவர்கள் பங்கேற்க மறுத்ததால் INDIA கூட்டணி கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு
டெல்லியில் வைத்து நாளை நடைபெறவிருந்த INDIA எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக NDTV செய்தி நிறுவனம் கூறியுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் இந்த சந்திப்பை தவிர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறிய சில மணிநேரங்களுக்குள் இந்த தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அவருக்கு பதிலாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், நாளை நடைபெறவிருந்த INDIA கூட்டணி கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கான காரணம் என்ன?
சமீபத்தில் சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால், அதில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கையில் இருந்த ஆட்சியை பாஜக கைப்பற்றியது. தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியை தழுவியது என்று தான் கூற வேண்டும். இந்நிலையில், தொகுதி பங்கீட்டு திட்டமிடுதலில் INDIA கூட்டணி கட்சிகளுக்குள் உடன்பாடு இல்லாததே காங்கிரஸ் தோல்வியுற்றதற்கு காரணம் என்று கூட்டணி கட்சிகள் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த பிரச்சனைகளை தீர்த்து, 2024 பொது தேர்தலுக்கான உத்திகளை திட்டமிட நாளை INDIA எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற இருந்தது.