காங்கிரஸுக்கு ரூ.1,800 கோடிக்கு மேல் வரி நோட்டீஸ்: பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்த அது நடந்து சில மணி நேரங்களுக்குள், வருமான வரித் துறையால் காங்கிரஸுக்கு இன்று ரூ.1,800 கோடிக்கு மேல் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2017-18 மற்றும் 2020-21 ஆண்டுகளுக்கான நோட்டீஸ் இதுவாகும். அந்த நோட்டீஸில் அபராதம் மற்றும் வட்டி ஆகியவை அடங்கும். ரூ.1,823.08 கோடி வரி நோட்டீஸ் பெற்றதை உறுதிப்படுத்திய காங்கிரஸ், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சியை நிதி ரீதியாக முடக்குவதற்கு பாஜக "வரி பயங்கரவாதத்தில்" ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
"தேர்தல் பத்திர ஊழல் மூலம் ரூ.8,200 கோடி வசூலித்த பாஜக"
காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து இது குறித்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அக்கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன், வருமான வரிச் சட்டங்களை பாஜக கடுமையாக மீறுவதாகக் குற்றம் சாட்டியதுடன், இதுபோன்ற விதிமீறல்களுக்காக பாஜக கட்சிக்கு ரூ.4,600 கோடிக்கு மேல் வருமான வரித்துறை அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். "தேர்தல் பத்திர ஊழல்" மூலம், பாஜக ரூ.8,200 கோடி வசூலித்ததாகவும், "ப்ரீ-பெய்டு, போஸ்ட்-பெய்டு, பிந்தைய ரெய்டு லஞ்சம் மற்றும் ஷெல் கம்பெனிகளின்" வழியை பாஜக பயன்படுத்தியதாகவும் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.