தமிழக ஆளுநர் குறித்து குடியரசு தலைவருக்கு புகார் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றுகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு கொடுத்த உரையிலிருந்த சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு படித்தது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. மேலும் அவர் முதல்வர் பேசிக்கொண்டிருக்கையில் அவையிலிருந்து வெளியேறிய சம்பவம் அனைத்து அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் தமிழகஅரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் இம்மோதல் உச்சத்தினை தொட்டுள்ளது என்றே கூறலாம். 7 நாள் பயணமாக தற்போது தமிழக ஆளுநர் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநர்.ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு 15 பக்கக்கடிதம் ஒன்றினை எழுதியனுப்பியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
மக்களாட்சியின் முக்கிய அமைப்புகளிடையே சுமூகமான உறவு நிலவவேண்டும்-மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் எழுதிய இந்த சீலிடப்பட்ட கடிதத்தினை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.ராஜா, டி.ஆர்.பாலு, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து கொடுத்துள்ளனர். அந்த புகார் கடிதத்தில், தமிழக ஆளுநர் ரவிக்கு அறிவுரை வழங்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களுக்கு ஏற்ற வகையில் ஆளுநர் பணியாற்ற அறிவுறுத்தும்படியும், மரபுகளை மீறாமல் தமிழக மக்களுக்காக பணியாற்ற அறிவுறுத்துங்கள் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, மக்களாட்சியின் முக்கிய அமைப்புகளிடையே சுமூகமான உறவு நிலவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.