மகளிர் இடஒதுக்கீட்டுக்கு வரும் எல்லா தடைகளையும் அகற்றுவோம்: தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பிரதமர் மோடி உறுதி
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்ற தங்களது அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று சனிக்கிழமை அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். எக்ஸ் சமூக வலைதளத்தில் வீடியோ செய்தியுடன் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீட்டுக்குத் தடையாக இருக்கும் ஒவ்வொரு தடையையும் தங்களது அரசு நிச்சயம் அகற்றும் என உறுதியளித்துள்ளார்.
பிரதமர் திட்டவட்டம்
எதிர்க்கட்சிகளால் நாரி சக்தியின் பங்களிப்பைத் தடுக்க முடியாது என பிரதமர் திட்டவட்டம்
பெண்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்குவதற்கான போராட்டம் பல தசாப்தங்களாக நடைபெற்று வருவதாகவும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான சகோதரிகள் கடிதங்கள் மூலமாகவும் நேரிலும் தன்னிடம் இது குறித்து பேசியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் 100 சதவீத நாரி சக்தியின் ஆசீர்வாதமும் தங்களுக்கு இருப்பதால் தங்களது மன உறுதியும் தைரியமும் அசைக்க முடியாததாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் அரசியல் கட்சிகளால் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பதை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் இது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விகிதாச்சார முடக்கம்
850 மக்களவை இடங்கள் மற்றும் தென் மாநிலங்களுக்காக 2051 வரை விகிதாச்சார முடக்கம்
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அரசியலமைப்பு 132-வது திருத்த மசோதா 2026 மற்றும் தொகுதி மறுவரையறை இரண்டாம் மசோதா 2026 ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த புதிய மசோதாவின் கீழ் மக்களவையின் அதிகபட்ச பலம் 550-லிருந்து 850-ஆகவும் மாநிலச் சட்டப்பேரவைகளின் அதிகபட்ச பலம் 500-லிருந்து 650-ஆகவும் 50 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.
மேலும் மக்கள்தொகை அடிப்படையிலான மறுவரையறையால் தங்கள் பிரதிநிதித்துவத்தை இழப்போம் என்ற தென் மாநிலங்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் மாநிலங்களுக்கு இடையிலான தற்போதைய இட விகிதாச்சாரம் 2051-ஆம் ஆண்டு வரை மாற்றப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய மசோதா
கடந்த ஏப்ரல் மசோதா தோல்விக்கு பின் நவம்பர் 30 சிறப்புக் கூட்டத்தொடரில் புதிய மசோதா
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதா 298 ஆதரவு வாக்குகளையும் 230 எதிர்ப்பு வாக்குகளையும் பெற்ற போதிலும் மூன்றில் இரண்டு பங்கு சிறப்பு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது.
எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுத் திருத்தப்பட்ட புதிய மசோதா வரும் நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கும் 4 நாள் மக்களவை சிறப்பு அமர்வில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 2-ஆம் தேதி மாநிலங்களவையும் கூட உள்ள நிலையில் இந்த மசோதாக்கள் மீது தீவிர விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.