வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது
இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிகம் செய்வோர் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையே போர் எழுந்த நிலையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தது. அதன் காரணமாக அப்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்டவைகளின் விலைகள் உயர்ந்தது. அதன் பின்னர் கச்சா எண்ணெயின் விலை குறைய துவங்கியது. ஆனால் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. இதனிடையே அண்மையில் இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் இடையே போர் நிலவ துவங்கியது.
ரூ.57 குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்
இந்த போர் காரணமாக மீண்டும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனையடுத்து வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையினை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் இம்மாதம் 1ம் தேதி உயர்த்தியது. அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.101 உயர்த்தப்பட்டு, அதன் பழைய விலையான ரூ.1,898ல் இருந்து ரூ.1,999க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே இன்று(நவ.,16)வெளியாகியுள்ள தகவல்படி வணிக சிலிண்டரின் விலை ரூ.57 குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரூ.1,999க்கு விற்கப்பட்ட சிலிண்டர் தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.1,942ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எவ்வித மாற்றமுமின்றி ரூ.918.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.