கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்
கோவை மாநகர டி.ஐ.ஜி.யாக இருந்தவர் விஜயகுமார், இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை மாவட்டத்தில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை.,7ம் தேதி காலை இவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார். இச்சம்பவம் கோவையினை மட்டுமின்றி, போலீஸ் வட்டாரத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இவ்வழக்கு குறித்து ராமநாதபுரம் காவல்துறை தீவிர விசாரணையினை மேற்கொள்ள துவங்கினர். அவ்வாறு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், டி.ஐ.ஜி. விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து விஜயகுமார் வீட்டின் அக்கம்பக்கத்தில் உள்ளோர், அவரது குடும்பத்தினர்கள், அவரது மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து சிலர் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.
நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
இதனையடுத்து அவ்வாறு சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தவர்கள் மற்றும் அதனை வெளியிட்ட சமூக ஊடகங்கள் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன் பேரில், சமீபத்தில் கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை குறித்து சமூக வலைத்தளங்களில் பேட்டியளித்தவர்கள், தங்கள் கருத்துக்களை கூறியவர்கள் என 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் அனைவரும் நாளை மறுநாள்(ஜூலை.,18) கோவை காவல்துறையினர் முன்னர் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் அவ்வாறு ஆஜராகும் பட்சத்தில், அவர்கள் கூறிய கருத்துக்களும், பேட்டியும் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறப்பட்டது என்ற கோணத்தில் விசாரணை நடக்கும் என்று கூறப்படுகிறது.