கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - கொள்ளையனை கைது செய்தது தனிப்படை காவல்துறை
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ். இந்த கடையில் கடந்த நவ.,27ம்தேதி நள்ளிரவில் கொள்ளை சம்பவம் நடந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படைகளை காவல்துறை அமைத்தது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், சிசிடிவி ஆய்வு மூலம் கொள்ளையன் தனது முகத்தை சட்டை கொண்டு மூடியபடி கொள்ளையடித்த நகைகளோடு வெளியில் வந்த பதிவு கண்டறியப்பட்டது. மேலும் 4.8 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது. பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட நபரின் பெயர் விஜய் என்பதும் அவர் தருமபுரியை சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. விஜய் தலைமறைவான பட்சத்தில், அவரது மனைவி நர்மதா மற்றும் மாமியார் யோகராணி உள்ளிட்டோரும் இதற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.
கோவைக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ய முடிவு
இதன்படி கடந்த 30ம்.,தேதி மனைவி நர்மதாவிடம் விசாரணை நடத்திய தனிப்படை காவல்துறையினர் 3.2 கிலோ நகைகளை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்தனர். தொடர்ந்து தருமபுரியில் தும்பலஹள்ளி என்னும் பகுதியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த மாமியார் யோகராணியிடமும் விசாரணை நடத்தப்பட்டு 1.35 கிலோ நகைகள் பறிமுதல் செய்ததோடு அவரை கைதும் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 95%நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஆந்திரா, காளஹஸ்தியில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்ட கன்னி சாமி வேஷத்தில் விஜய் இருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் காளஹஸ்தியில் இருந்து சென்னை திரும்பும் வழியில் விஜயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 400கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கோவைக்கு அழைத்துச்சென்று விசாரணை செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.