கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - குற்றவாளி அடையாளம் காணப்பட்டதாக தகவல்
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ். இந்த கடையில் கடந்த நவ.,27ம் தேதி நள்ளிரவு நேரத்தில் கொள்ளை சம்பவம் நடந்தது. இதுகுறித்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு 5 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், கொள்ளையன் தனது முகத்தை சட்டை கொண்டு மூடியபடி கொள்ளையடித்த நகைகளோடு வெளியில் வந்த பதிவு கண்டறியப்பட்டது. வெளியில் வந்த பிறகு சட்டையினை கடையின் வாசலில் போட்டுவிட்டு வேறு சட்டை அணிந்து கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளான். இதனையடுத்து கொள்ளையனின் சட்டையை கைப்பற்றிய காவல்துறை அதிலிருந்து பயணச்சீட்டுகளை வைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
குற்றவாளியை தருமபுரியில் முகாமிட்டு தேடி வரும் தனிப்படையினர்
அந்த வகையில், கொள்ளையன் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கிடவு வரை ஒரு பேருந்திலும், கிணத்துக்கிடவில் இருந்து கோவைக்கு ஓர் பேருந்திலும் வந்துள்ளான். கொள்ளையடித்த பின்னர் நகைகளோடு கொள்ளையன் ஆட்டோவில் ஏறி உக்கடம் பேருந்து நிலையம் சென்றுள்ளான். பின்னர் அங்கிருந்து பேருந்தில் பொள்ளாச்சிக்கு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படையினர் தங்கள் தேடுதலை தீவிரப்படுத்தியதில் நகைகளை கொள்ளையடித்த நபர் தருமபுரி-அரூர் பகுதியினை சேர்ந்த விஜயகுமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் தங்கி திருடுவது குறித்து திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது விஜயகுமார் மனைவியிடம் இருந்து 3 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்த தனிப்படை தற்போது விஜயகுமாரை தருமபுரியில் முகாமிட்டு தேடி வருகிறார்கள்.