கோவை ஆனைகட்டி வனப்பகுதியில் 13 சட்டவிரோத ரிசார்ட்டுகள் மூடல்: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்சியர் அறிக்கை
செய்தி முன்னோட்டம்
கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் யானைகள் உலாவும் பாதைகளை ஆக்கிரமித்துச் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 13 ரிசார்ட்டுகள் மூடப்பட்டுள்ளதாகவும், மேலும் 12 ரிசார்ட்டுகளை மூடுவதற்கு இறுதி கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கோவை எண் 24 வீரபாண்டி மற்றும் நஞ்சுண்டாபுரம் ஊராட்சிகளுக்குட்பட்ட ஆனைகட்டி வனப்பகுதியில் அனுமதியின்றி ரிசார்ட்டுகள் நடத்தப்படுவதாக சமூக ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனுதாரர் தரப்பில் 33 இடங்களில் விதிமீறல் இருப்பதாக பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதுகுறித்து கூட்டு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆய்வு
33 இடங்களில் ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு
நகர ஊரமைப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை மற்றும் வனத்துறை அடங்கிய குழுவினர் 33 இடங்களிலும் கூட்டாய்வு மேற்கொண்டு ஆவணங்களைச் சரிபார்த்தனர்.
இதில்,நகர ஊரமைப்புத் துறை அனுமதி, ஊராட்சி அனுமதி மற்றும் வனத்துறை தடையின்மை சான்று பெறாத 13 ரிசார்ட்டுகள் உரிமையாளர்களால் மூடப்பட்டுள்ளன.
12 ரிசார்ட்டுகளை மூடுவதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
3 ரிசார்ட்டுகள் (டார்ஸா ரிசார்ட்ஸ், மை வில்லேஜ் ஈகோ டூரிஸ்ட் ரிசார்ட், வைல்டு டோர் கபே) உரிய அனுமதியுடன் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
5 இடங்கள் ரிசார்ட்டுகள் அல்லாமல் குடியிருப்புப் பகுதிகளாக உள்ளன.
நோட்டீஸ்
கூடுதல் கட்டிடங்களுக்கு நோட்டீஸ் & மின் இணைப்பு ரத்து கோரிக்கை
காரமடை ஆரா ஜங்கிள் ரிசார்ட்டில் வரைபடத்திற்கு மாறாகக் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டதால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எஸ்.ஆர். ஜங்கிள் ரிசார்ட்டுக்கு மூடல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மூடப்பட்ட ரிசார்ட்டுகளின் மின் இணைப்பை உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என்றும், வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாட ஏதுவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வேலிகளை அகற்ற வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.