திருமண உதவித்தொகை 2 மடங்கு உயர்வு! சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்
செய்தி முன்னோட்டம்
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக கோட்டைக்கு வருகை தந்த அவரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து சிங்கப்பெண் அதிரடிப் படை மற்றும் இயற்கை பேரிடர் மீட்புப் படையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் விஜய்யின் பெற்றோர், நடிகை திரிஷா, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
பொதுவாழ்வு
லஞ்சமற்ற ஆட்சி மற்றும் பொதுவாழ்வு குறித்த உரை
தேசியக் கொடியை ஏற்றிய பிறகு மக்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர் விஜய், 386 ஆண்டுகள் பழமையான இந்த வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் 80வது சுதந்திர தினத்தில் கொடியேற்ற வாய்ப்பளித்த தமிழக மக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து முழுமையாகக் காப்பாற்றுவதும் ஒரு விடுதலைக்கு சமமான விஷயம் தான் எனக் குறிப்பிட்டார்.
மேலும் பொதுவாழ்வில் எந்தவொரு சமரசமும் இருக்கக் கூடாது என்றும், அரசு அலுவலகங்களைத் தேடி வரும் பொதுமக்களை அதிகாரிகள் எப்போதும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
திருமண நிதி
முன்னாள் படை வீரர்களின் மகள்களுக்கு திருமண நிதி உயர்வு
விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் முதலாவதாக, முன்னாள் படை வீரர்களின் இரண்டு மகள்களுக்கு வழங்கப்படும் திருமண நிதி உதவித் தொகை ரூ.25,000த்தில் இருந்து ரூ.50,000 ஆக இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
இரண்டாவதாக, மாற்றுத்திறன் கொண்ட படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர நிதி உதவித் தொகை ரூ.5,000த்தில் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.
ஓய்வூதியம்
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான ஓய்வூதிய உயர்வு
விடுதலைப் போராட்ட வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் எஞ்சிய 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.
அதன்படி, மாநில அரசால் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மேலும், மறைந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.12,500 ஆக உயர்த்தப்படுகிறது.
இறுதியாக, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் ஆகிய தியாகிகளின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் விஜய் பெருமிதத்துடன் அறிவித்தார்.