Loading...
தாராபுரத்தில் நாளை முதல்வர் விஜய் பிரச்சாரம்: கோவை - தாராபுரம் வரை முக்கிய போக்குவரத்து மாற்றம்
தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நாளை தாராபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.

தாராபுரத்தில் நாளை முதல்வர் விஜய் பிரச்சாரம்: கோவை - தாராபுரம் வரை முக்கிய போக்குவரத்து மாற்றம்

எழுதியவர் Vasuki
Sep 29, 2026
11:41 pm

செய்தி முன்னோட்டம்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இத்தேர்தலில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் என 5 முனைப்போட்டி நிலவுகிறது. வாக்குகள் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்படவுள்ள சூழலில், தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் நாளை (செப்டம்பர் 30) தாராபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். இதற்காக விமானம் மூலம் கோவை வந்தடையும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக தாராபுரம் சென்று ரோடு ஷோ நடத்துவதுடன், 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றவுள்ளார்.

ட்ரோன்கள் பறக்க தடை

கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம்

முதலமைச்சர் விஜய்யின் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் தாராபுரம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கோவையில் ட்ரோன்கள் பறக்க முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வழக்கமான பாதையில் பயணிக்கலாம் என்றும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு மட்டுமே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒட்டன்சத்திரம் வழியாக வரும் வாகனங்கள் உடுமலை - பொள்ளாச்சி வழியாகவும், கரூர் வழியாக வரும் வாகனங்கள் பழனி - பொள்ளாச்சி வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளன.

திருப்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்களுக்கும் மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காவல்துறை வேண்டுகோள்

விமான நிலையப் பயணிகளுக்கு கட்டுப்பாடு

பாதுகாப்பு மற்றும் நெரிசலைக் கட்டுப்படுத்த சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் நீலாம்பூர் வழியாக கோவை நகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டு, எல் அண்ட் டி பைபாஸ் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைய முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் வருகையையொட்டி விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் வழக்கமான நேரத்திற்கு 30 நிமிடங்கள் முன்னதாக வருமாறும், வாடகை கார்கள் விமான நிலைய வளாகத்தில் காத்திருக்க அனுமதியில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு செல்லும் போது தற்காலிக நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ADVERTISEMENT