'என்னை என்ன வேணும்னாலும் பேசுங்க, ஆனா பெண்களைப் பத்தி பேசினா!' தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் ஆவேசம்
செய்தி முன்னோட்டம்
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இரண்டாவது முறையாக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்றடைந்த அவர், அங்கிருந்து தாராபுரம் வரை சாலை மார்க்கமாக சென்று மக்களை சந்தித்தார். பிரச்சார நிறைவு நாளான இன்று நடைபெற்ற பேரணியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பெண்களைப் பற்றி அவதூறாக பேசுபவர்களை ஒருபோதும் சும்மா விடமாட்டேன் எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
பதிலடி
பெண்கள் பாதுகாப்பு மற்றும் அவதூறுகளுக்கு பதிலடி
தமது பிரச்சார உரையில் பேசிய முதலமைச்சர் விஜய், "என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நான் அதைப் பொறுத்துக் கொள்வேன்.
ஆனால் நமது வீட்டுப் பெண்கள், அம்மா, அக்கா மற்றும் தங்கைகளைப் பற்றித் தவறாகப் பேசினால் நான் அமைதியாக இருக்க மாட்டேன்." என எச்சரித்தார்.
வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டும் தான் இதைக் கூறவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
பெண்களை அவதூறாக பேசுபவர்களுக்கு மக்கள் ஓட்டளிக்கக் கூடாது என்றும், பெண்களின் மரியாதையைப் பாதுகாப்பதே தனது அரசின் முதன்மை நோக்கம் என்றும் சுட்டிக்காட்டினார்.
கண்டனம்
திமுக தலைவர் ஸ்டாலினின் பேச்சுக்குக் கடும் கண்டனம்
முன்னதாக தாராபுரத்தில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய விஜய், தாராபுரத்திற்கு வந்து தவறான கருத்துக்களை பேசிவிட்டுச் சென்ற திமுக தலைவர்களுக்கும் அவற்றுடன் உடந்தையாக இருப்பவர்களுக்கும் மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.
தேர்தலுக்காக மட்டுமின்றி எப்போது வேண்டுமானாலும் மக்களைத் தேடி நேரில் வருவேன் என்றும் உறுதிபடக் கூறினார்.
இறுதிக்கட்ட பிரச்சாரம்
இறுதிக்கட்ட பிரச்சாரமும் அக்டோபர் 6 வாக்குப்பதிவும்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்த தவெக, தற்போது காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளைக் கைப்பற்றத் தீவிரமாக இயங்கி வருகிறது.
இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில், அரசியல் தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஐந்து முனைப் போட்டி நிலவும் இவ்விரு தொகுதிகளிலும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் இந்த ஆவேசப் பேச்சு தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.