திமுக முப்பெரும் விழாவையொட்டி முதல்வர் இன்று வேலூர் பயணம்
தமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டத்தில் நாளை(செப்.,17) திமுக பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடக்கவுள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் பங்கேற்கவுள்ளனர். இதற்காக வேலூர் அடுத்துள்ள கந்தனேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையருகே கோட்டை வடிவில் பிரம்மாண்ட முறையில் பந்தல் அமைத்துள்ளனர். இந்நிலையில் இதில் கலந்துக்கொள்ள ஸ்டாலின் இன்று(செப்.,16) சென்னையிலிருந்து ரயில் மார்க்கமாக காட்பாடி சென்றடையவுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதனையடுத்து அவர் இன்று இரவு வேலூரிலுள்ள அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் தங்குவார் என்று கூறப்படுகிறது.
நாளை வேலூரில் பெரிய பலூன்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை
அதனையடுத்து நாளை மாலை நடைபெறவுள்ள பொதுக்கூட்ட நிகழ்வில் முதல்வர் சிறப்பான பேருரை ஆற்றவுள்ளார். இதற்காக சுமார் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குடிநீர் வசதி, கழிவறை வசதி, இருக்கைகள், பார்க்கிங் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு தற்போது தயார் நிலையில் அப்பகுதி உள்ளது என்று கூறப்படுகிறது. முதல்வர் வருகையினையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட எல்லை பகுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் பெரிய பலூன்களும், ட்ரோன்களும் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்