கேரளா மாநில பெயரினை மாற்ற முதல்வர் பினராயி விஜயன் முடிவு
கேரளா என்னும் பெயரினை மாற்றியமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி மத்திய அரசின் அனைத்து அதிகாரபூர்வ கோப்புகளிலும் 'கேரளா' என்னும் பெயரினை 'கேரளம்' என மாற்ற வேண்டும் என்று கேரள மாநில சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் தாக்கல் செய்யவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த மாநில பெயர் மாற்றம் குறித்த தீர்மானம் இன்று(ஆகஸ்ட்.,9) நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரிலேயே விவாதிக்கப்பட்டு இன்றே அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேரள சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 7ம் தேதி துவங்கியது என்பது குறிப்பிடவேண்டியவை.
பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
முன்னதாக இந்த சட்டசபை கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசு தீர்மானம் ஒன்றினை தாக்கல் செய்தது என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் இதன் மீதான விவாதம் துவங்கியது. அப்பொழுது பேசிய பினராயி விஜயன், பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பில் உள்ள மதச்சார்பற்ற தன்மை வீழ்த்தப்படும் என்று கூறினார். மேலும், பாஜக மக்களின் கவனத்தினை முக்கியமான பிரச்சனைகளில் இருந்து திசைத்திருப்ப முயற்சி செய்கிறது என்னும் குற்றச்சாட்டினையும் முன்வைத்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி தலைவரான வி.டி.சதீசன் ஆதரவு தெரிவித்த நிலையில், பொது சிவில் சட்டத்திற்கான தீர்மானம் சட்டசபை கூட்டத்தில் நேற்று(ஆக்ஸ்ட்.,9) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.