ஒரே வகுப்பில் படிக்கும் மாணவனை காம்பஸால் 108 முறை குத்திய 4ஆம் வகுப்பு சிறுவர்கள்
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 4ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் சேர்ந்து அதே வகுப்பில் படிக்கும் மாணவனை 108 முறை காம்பஸால் குத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 24 அன்று மதியம் 2 மணியளவில் அந்த மாணவர்கள் படிக்கும் பள்ளியில் வைத்து இந்த சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கூறியுள்ளார். "எனது மகன் வீடு திரும்பியதும் நடந்த கொடுமையை என்னிடம் கூறினான். ஏன் அவனது வகுப்பு தோழர்கள் அப்படி செய்தார்கள் என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை. பள்ளி நிர்வாகம் வகுப்பறையின் சிசிடிவி காட்சிகளை எனக்கு கொடுக்க மறுக்கிறது." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க கோரியது குழந்தைகள் நலக் குழு
இந்த சம்பவம் குறித்து ஏரோட்ரோம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவல் உதவி ஆணையர் விவேக் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு காவல்துறையிடம் குழந்தைகள் நலக் குழு (CWC) கேட்டுள்ளது, இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு CWC ஆலோசனை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும்,வன்முறைக் காட்சிகளைக் கொண்ட வீடியோ கேம்களை அந்த குழந்தைகள் விளையாடுகிறார்களா என்பதையும் கண்டறிய உள்ளதாக CWC கூறியுள்ளது.