தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் - திரளாக திரண்ட பக்தர்கள்
தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து தற்போது வரை அழகுற காட்சியளிக்கிறது. இந்த கோவிலில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி தேரோட்டம் நடந்தது. அதனை தொடர்ந்தே ஒவ்வொரு ஆண்டும் இங்கு சித்திரை திருவிழா நடைபெற துவங்கியதாக கூறப்படுகிறது. அதன்படி இந்தாண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்படி இந்த விழாவினையொட்டி சாமியின் வீதி உலா 4 ராஜ வீதிகளில் நடந்து வருகிறது. கொடியேற்றிய தினத்தில் இருந்தே தினமும் சுவாமி, அம்மன் சிம்ம வாகனம், மூஞ்சுறு வாகனம், மேஷ வாகனம், வெள்ளி மயில் வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது குறிப்பிடவேண்டியவை.
பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று(மே.,1) காலையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த தேரோட்டத்தினையொட்டி அதிகாலை 5 மணிக்கு முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர்நிலைக்கு வந்தது. பின்னர் 6 மணியளவில் கமலாம்பாள் சமேத தியாகராஜ சுவாமி தேரில் எழுந்தருளினார். விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி, நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளினர். இவற்றையடுத்து காலை 6.50 தேரோட்டமானது துவங்கியது. வண்ணமலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட 16அடி உயரம், 18அடி அகலம் கொண்ட அத்தேரினை ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வடம்பிடித்து இழுத்து துவக்கிவைத்தார். அதனைதொடர்ந்து பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர், திரளாக அங்குக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்து பரவசம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.