உலகம் முழுவதும் சீனாவுக்கு கட்டுப்பாடுகள்: கொந்தளிக்கும் சீனா!
சீனாவில் புதிய வகை கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால், பல நாடுகள் சீன பயணிகள் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முக்கியமாக, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி இருக்கின்றனர். நேற்று(ஜன:3) இதை கடுமையாக கண்டித்த சீனா, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
உலக நாடுகளை எச்சரித்த சீன வெளியுறவுதுறை அமைச்சகம்:
"சில நாடுகள் சீனப் பயணிகளை மட்டும் குறிவைத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளன" என்று சீன வெளியுறவுதுறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்திருப்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறிய அவர், சில நடைமுறைகளை "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் இதற்கு தங்களால் பதிலடி நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.