ரேஷன் கார்டுகளில் இருந்து குழந்தைகள் பெயர்களை நீக்க கூடாது - தமிழக அரசு
ஆதார் எண் இணைக்கப்படாத குழந்தைகளின் பெயர்களை ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்க கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது. தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டுமென்றால் அதற்கு ஆதார் கார்டின் எண் மிக முக்கியம். ஆதார் எண் இல்லாமல் தமிழகத்தில் பொதுமக்கள் ரேஷன் கார்டு வாங்க முடியாது. அதே போல் ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்கள் பட்டியலில் புதிய பெயரினை சேர்க்க வேண்டுமென்றாலும் ஆதார் எண் கட்டாயம் என்பது விதிமுறை. ஆனால் 5 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளின் பெயர்களை ரேஷன் கார்டுகளில் சேர்க்க வேண்டும் என்றால் மட்டும் ஆதார் எண் தேவையில்லை என்பது குறிப்பிடவேண்டியவை.
குழந்தைகளின் ஆதார் எண் இணைக்க பெற்றோர் முன்வர வேண்டும்
மேற்கூறியவாறு, தமிழ்நாடு மாநிலத்தில் 5 வயதுக்குகீழே உள்ள குழந்தைகள் பெயரினை ரேஷன் கார்டில் சேர்க்க ஆதார் கார்டுக்கு பதிலாக குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் நகலினை சமர்ப்பிக்க வேண்டும். 5 வயதிற்குமேல் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கப்பட்டு அதனை ரேஷன் கார்டில் இணைக்க வேண்டும் என்பதே தற்போதுள்ள நடைமுறை. ஆனால் ஆதார் கார்டு இல்லாத குழந்தைகளின் பெயர்கள் ரேஷன்கார்டுகளில் இருந்து நீக்கப்படுவதாக அண்மையில் புகார்கள் எழுந்தது. இந்நிலையில், ஆதார்எண் இணைக்கவேண்டிய குழந்தைகளின் பெற்றோர்களை நேரில் சென்றோ அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டோ ஆதார் எண் இணைப்பது குறித்து அறிவுறுத்த வேண்டும். பெயர்களை ரேஷன் அட்டையில் இருந்து நீக்கக்கூடாது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் ஆதார் எண்ணை இணைக்க தாமாகவே முன்வரவேண்டும் என்று தமிழகஅரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.