'நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது': இந்திய தலைமை நீதிபதி
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று நீட்-யுஜி தேர்வு 2024 தொடர்பான மனுக்களை விசாரித்த போது, வினாத்தாள் கசிந்தது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை என்று குறிப்பிட்டுள்ளார் மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று தொடங்கியது. கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடந்ததால், அந்த தேர்வை ரத்து செய்து, புதிதாக நடத்த வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் மற்றும் இதர மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நாடு தழுவிய தேர்வு தொடர்பான 38 மனுக்களை பரிசீலித்து வருகிறது.
நீட் தேர்வு சரியாக நடத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டு
தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தேர்வை நடத்துவதற்கான நிலையான நடைமுறையை பின்பற்றவில்லை என்று சில மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். வினாத்தாள் கசிவு ஏற்பட்டதில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனையடுத்து, இந்தியா முழுவதும்உள்ள எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இதனால் அரசியலிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதை இன்று விசாரித்த இந்திய தலைமை நீதிபதி, "வினாத்தாள் கசிவு நடந்துள்ளது என்பதும், தேர்வின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது." என்று கூறியுள்ளார். மேலும், நீட்வினாத்தாள் எங்கெல்லாம் சென்றது, யாரெல்லாம் அதை கையாண்டார்கள் என்பது குறித்தும் கேள்வி எழுப்பட்டுள்ளது.