சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சென்னை மாணவி
சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகர் பகுதியினை சேர்ந்தவர் நிக்ஸன்(47), கார் ட்ரைவர். இவருடைய மனைவி கிரிஷ்ணமாலா, இவர்களுக்கு பெமினா, டெலான் ஆண்டர்சன் என இரண்டு பிள்ளைகள் உள்ளதாக தெரிகிறது. பெமினா(15) சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோடை விடுமுறை காரணமாக நிக்ஸன் தனது குடும்பம் மற்றும் உறவினர்களோடு தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு காரில் நேற்று(மே.,14) சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சுற்றியுள்ள பகுதிகளை கண்டு ரசித்த இவர்கள் அனைவரும் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் மிக சந்தோஷமாக குளித்துள்ளனர். பின்னர் பெமினா உள்பட அனைவரும் அருவியில் இருந்து தங்கள் கார் நிற்கும் இடத்திற்கு நடந்து சென்றுள்ளார்கள்.
40 ஆண்டுகளுக்கு முன்னர் அகதிகளாக தமிழகம் வந்த பெமினா பெற்றோர்
அப்போது அவர்கள் வென்னியாறு பாலம் அருகே சென்றப்பொழுது, அங்கிருந்த ஒரு மரத்திலிருந்து பெரிய கிளை ஒன்று எதிர்பாரா விதமாக திடீரென முறிந்து பெமினா தலை மீது விழுந்துள்ளது. சம்பவயிடத்திலேயே பெமினா ரத்தம் சொட்ட சொட்ட பரிதாபமாக உயிரிழந்தார். தங்களுடன் நன்றாக பேசிக்கொண்டு நடந்து வந்த பெமினா கண்இமைக்கும் நேரத்தில் தங்கள் கண்முன்னே உயிரிழந்ததை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி பெமினாவின் பெற்றோர் இலங்கையில் இருந்து 40ஆண்டுகளுக்கு முன்னர் அகதிகளாக தமிழகம் வந்தவர்கள். சென்னை கும்மிடிப்பூண்டி முகாமில் வசித்துவந்த அவர்கள், தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக நீலாங்கரை பகுதியில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.