சென்னையில் 'ஆகஸ்ட் 26' வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள்: விபத்தில்லா நாளாக அறிவிப்பு
சென்னை போக்குவரத்து காவல்துறையின் 'Zero is Good' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நேற்று சென்னையில் ஒரு விபத்து கூட பதிவாகவில்லை. இதனை அதிகாரபூர்வமாக அறிவித்த போக்குவரத்து காவல்துறையினர், ஆகஸ்ட் 5ஆம் தேதி துவக்கப்பட்ட இந்த தீவிரமான பிரச்சாரத்தின் எதிரொலியாக சென்னையில் படிப்படியாக விபத்துகள் குறைந்து வந்தது எனவும், அதன் முத்தாய்ப்பாக நேற்று நகரில் எந்த விபத்தும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழப்பு மற்றும் கடுமையான காயங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் குறைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. "2023ஆம் ஆண்டின் 41 உயிரிழப்பு விபத்துகளுடன் ஒப்பிடுகையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து இன்றுவரை மொத்தம் 28 இறப்புகள் பதிவாகியுள்ளன" என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.