சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்
சென்னையில் நேற்று(செப்.,29) இரவு கனமழை பெய்தது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போட வந்தவர்கள், மழைக்காக ஒதுங்கியவர்கள் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். அப்போது எதிர்பாரா விதமாக அந்த பெட்ரோல் பங்க்கின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்துள்ளது. இதில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்த தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை தீயணைப்பு துறையினர், காவல்துறை, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், 19 பேர் படுகாயங்களோடு மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெட்ரோல் பங்க் ஊழியர் உயிரிழப்பு
அதன்படி, சிகிச்சை பெற்றுவந்த 19 பேரில் 7 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த விபத்தில் 53 வயதான கந்தசாமி என்பவர் பலத்த காயம் அடைந்து உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவர் அந்த பெட்ரோல் பங்க்'ன் ஊழியராவார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் சோகத்தினை ஏற்படுத்தியது. விபத்துக்குள்ளான பங்க்'கின் உரிமையாளர் அசோக் மற்றும் மேலாளர் வினோத் மீது சைதாப்பேட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விபத்து ஏற்பட்ட இடத்தினை தற்போது மூடி சீல் வைத்து நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.