சென்னை மெட்ரோவில் ஆகஸ்டில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அதிகரிப்பு
2024 ஆகஸ்ட் மாதம் முழுவதும் சென்னை மெட்ரோ ரயில்களில் 95,43,625 பயணிகள் பயணம் மேற்கொண்டு புதிய சாதனை படைத்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் திங்கட்கிழமை (செப்டம்பர் 2) அறிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டதில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஆகஸ்ட் மாதம் பயணம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 2024 க்கான பயணிகள் வருகை ஜூலை 2024 உடன் ஒப்பிடும்போது 8,606 பயணிகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது. இந்த சீரான வளர்ச்சி, சென்னை பெரு நகரத்தில் பயணிகளிடையே மெட்ரோ ரயில் சேவை பிரபலமடைந்து வருவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மாதவாரியாக புள்ளிவிபரம்
ஆகஸ்ட் மாதத்தைப் பொறுத்தவரை, சுதந்திர தினத்திற்கு முந்தைய தினமான ஆகஸ்ட் 14, 2024 அன்று மொத்தம் 3,69,547 பயணிகளுடன் அந்த மாதத்தில் ஒரு நாளின் அதிகபட்ச பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் மாத வாரியாக பார்க்கும்போது, ஜனவரியில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரியில் 86,15,008 பயணிகளும், மார்ச்சில் 86,82,457 பயணிகளும், ஏப்ரலில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, பயணிகளின் வசதியை மேம்படுத்தும் முயற்சியாக, சென்னை மெட்ரோ நிறுவனம் தற்போது மெட்ரோ பயண அட்டைகள், மொபைல் கியூஆர் குறியீடு டிக்கெட்டுகள், குழு டிக்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களை வழங்குகிறது.