தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நேர்ந்த 2 தற்கொலைகள் - சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக பல பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அண்மையில் சென்னை பெருங்குடியில் வசித்துவந்த தனியார் வங்கி ஊழியரான மணிகண்டன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தினை இழந்த காரணத்தினால் தனது மனைவி, இரு மகன்களை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல், சென்னை அண்ணாநகரில் வசித்த ரகுவரன் என்பவரும் தற்கொலை செய்துகொண்டார். இந்த இரண்டு தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸுகளுக்கு தடைவிதித்து, அதனை ரத்து செய்யவேண்டும் என மும்பையை சேர்ந்த 24*7 கேம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் அளித்த மனுக்களில், காவல்துறை கேட்ட விவரங்களை அளித்து ஒத்துழைப்பு அளித்த நிலையிலும், காவல்துறை உள்நோக்குடன் பொத்தாம்பொதுவாக விசாரணையினை மேற்கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
விசாரணை என்னும் பெயரில் துன்புறுத்துவதாக குற்றசாட்டு
மேலும் தாங்கள் பணம் வைத்து விளையாட யாரையும் வற்புறுத்தவில்லை என்றும் ரம்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைதொடர்ந்து, ரம்மி தடை சட்டத்தை தடைசெய்யும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக விசாரணை என்னும் பெயரில் துன்புறுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேபோல், 2017ம்ஆண்டிற்கு பிறகு மணிகண்டன் தங்கள் தளத்தில் விளையாடவில்லை என்றும், 5 ஆண்டுகளுக்கு பிறகே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி ஜி.சந்திரசேகரன், விசாரணைக்காக தகவல்களை கேட்டு மட்டுமே சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். தொடர்ந்து, இதுகுறித்து சிபிசிஐடி, டிஜிபி காவல்துறை, தமிழக அரசு ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை மார்ச் 14ம்தேதிக்கு தள்ளிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.