
திருமணமான சில மணி நேரங்களில் காதலனுடன் ஓட்டம் பிடித்த புது மணப்பெண்; சென்னையில் சோகம்
செய்தி முன்னோட்டம்
திருமண நடந்த சில மணி நேரங்களில் புதுமணப் பெண் கணவனுக்கு டாடா காட்டிவிட்டு தனது காதலனுடன் ஓடிப்போன சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரம்பூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்ணுக்கு, மாதவரம் பர்மா காலனியைச் சேர்ந்த விஜயகுமாருடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலை பெசன்ட் நகர் தேவாலயத்தில் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து தம்பதி வீட்டிற்குத் திரும்பிய நிலையில், மாலை திருமண வரவேற்புக்கு குடும்பத்தினர் தயாராகி வந்தனர். இந்நிலையில், மதிய வேளையில் புதுமணப் பெண் அர்ச்சனா மேக்கப் போட பியூட்டி பார்லர் செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார். ஆனால், அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாதது பதற்றத்தை ஏற்படுத்தியது.
காதல்
காதலில் இருந்த அர்ச்சனா
குடும்பத்தினரின் தேடலுக்குப் பிறகு, அர்ச்சனா கொடுங்கையூர் எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கலையரசன் என்பவருடன் உறவில் இருந்ததாகவும், திருமணத்தைத் தொடர விரும்பாமல் காதலனுடன் சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து திருவிக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அர்ச்சனா மற்றும் கலையரசன் ஆகிய இருவரின் மொபைல் எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. இதனால், மாலையில் திட்டமிடப்பட்டிருந்த திருமண வரவேற்பு நின்றுபோன நிலையில், மறுநாள் காலையில் கலையரசனுடன் காவல்நிலையம் வந்த அர்ச்சனா, மாப்பிளை விஜயகுமாரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு பெற்றோருடன் சென்றார். இதையடுத்து திருமண செலவுக்கான இழப்பீட்டை வழங்குவதாக பெண் வீட்டார் தரப்பில் உறுதியளித்தனர். என்ன இருந்தாலும், திருமணம் செய்த பெண் ஓட்டம் பிடித்தது மாப்பிள்ளைக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.