
சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
2024ம் ஆண்டின் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறுவதற்கான அறிவிப்பினை வெளியிடும் நிகழ்வானது நேற்று(ஜூன்.,7) சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடந்தது.
இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுநலத்துறை இயக்குனர் இளம்பகவத், திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் இலக்கியங்கள் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கம் காரணமாகவே இந்த சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது.
உலகிலுள்ள எம்மொழியாக இருந்தாலும் சரி, சிறந்த படைப்பாளர் கொண்டாடப்பட வேண்டும்.
அவர்களின் அருமையான படைப்புகள் தமிழக மக்களுக்கு சேர வேண்டும்.
இந்த நோக்கமானது புத்தக கண்காட்சி நடத்துவதன் மூலம் நடக்கும்" என்று கூறியுள்ளார்.
புத்தகம்
மொழிபெயர்ப்பு மானியம் ரூ.3 கோடி - தமிழக அரசு
தொடர்ந்து பேசிய அவர், "கடந்தாண்டு புத்தக கண்காட்சி குறுகிய காலத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.
அப்போது 24 நாடுகளிலிருந்து 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தங்களை நடைமுறைக்கு கொண்டு வர மொழிபெயர்ப்பு மானியம் ரூ.3 கோடியினை தமிழக அரசு வழங்கவுள்ளது.
கருணாநிதி நூற்றாண்டாக கொண்டாடப்படும் இந்தாண்டு மொழிபெயர்ப்பிற்கான மானியம் வழங்கப்படுவது பெருமையாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 2024ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள இந்த 2வது சர்வதேச புத்தகக்கண்காட்சி ஜனவரி 16ல் இருந்து 18 வரை 3 நாட்களுக்கு நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது என்று இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.