செங்கல்பட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது நேர்ந்த விபரீதம் - சிறுவன் படுகாயம்
முடிச்சூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரைபிள் கிளப் என்னும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர்கள் உள்பட பலர் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இங்கு மண்ணிவாக்கம் பகுதியினை சேர்ந்த சதீஷ் பாபு என்பவரது 7ம் வகுப்பு பயிலும் 13 வயது மகனும் கடந்த ஓராண்டாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று(ஜன.,4) காலை வழக்கம்போல் அச்சிறுவன் பயிற்சியினை மேற்கொண்ட நிலையில், துப்பாக்கியில் இருந்து வெளியேறிய அலுமினிய குண்டு இலக்கினை அடைந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சிறுவன்
பின்னர் ஏர் கண் வெடித்து மீண்டும் ரிட்டர்ன் ஆன அலுமினிய குண்டு சிறுவனின் பின்னந்தலையில் பாய்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அந்த சிறுவன் வலியால் துடித்துள்ளான். அதனை தொடர்ந்து, அந்த சிறுவனின் தந்தை அவனை முடிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளார். அங்கு அச்சிறுவனுக்கு முதலுதவி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து குரோம்பேட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பீர்க்கன்கரணை காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தங்களது விசாரணையினை துவங்கியுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.