
கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து
செய்தி முன்னோட்டம்
NCERT பாடப்புத்தகங்களில் இருந்து குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் நீக்கியது "காவி மயமாக்கும்" நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று(ஏப்-7) குற்றம் சாட்டியுள்ளார்.
"அரசியல் உள் நோக்கத்துடன் NCERT பாடப்புத்தகங்களில் இருந்து சில அத்தியாயங்கள் மற்றும் பிரிவுகளை நீக்கியது வரலாற்றை மறுக்கும் முயற்சியாகும். மேலும், அது ஒரு ஆட்சேபனைக்குரிய விஷயம்" என்று ஃபேஸ்புக்கில் பினராயி விஜயன் பதிவிட்டிருக்கிறார்.
"வரலாற்று உண்மைகளை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கி நிராகரிக்க முடியாது. பாடப்புத்தகங்களை காவி மயமாக்குவதே இத்தகைய நடவடிக்கைகளின் நோக்கம் என்பது தெளிவாகிறது," என்றும் அவர் கூறியுள்ளார்.
"12ஆம் வகுப்பு அரசறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து காந்தியின் படுகொலை மற்றும் RSS மீதான தடை குறித்த பகுதி தவிர்க்கப்பட்டுள்ளது." என்றும் அவர் குறிப்பிட்டிருத்தார்.
இந்தியா
முகலாயர்கள் பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்படவில்லை: NCERT இயக்குனர்
புதிதாக வெளியிடப்பட்ட 12ஆம் வகுப்பு அரசறிவியல்(Political science) பாடப்புத்தகத்தில் மகாத்மா காந்தி, RSS, இந்து-முஸ்லீம் நல்லிணக்கம் பற்றிய வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக ஒரு பரபரப்பு தகவல் சமீபத்தில் வெளியானது.
அதை பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
"காந்திஜியின் மரணம் நாட்டின் வகுப்புவாத சூழ்நிலையில் ஒரு மாயாஜால தாக்கத்தை ஏற்படுத்தியது.", "RSS [ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம்] போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட்டன", "இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக காந்தி பாடுபட்டது இந்து தீவிரவாதிகளை தூண்டியது" போன்ற வரிகள் பாடபுத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சர்ச்சைக்கு பதிலளித்த NCERT இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி, "அது ஒரு பொய். முகலாயர்கள் பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்படவில்லை. " என்று கூறியுள்ளார்.