RSS, மகாத்மா காந்தி பற்றிய விவரங்கள் பள்ளி புத்தங்கங்களில் இருந்து நீக்கப்பட்டதா
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(NCERT) 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட 12ஆம் வகுப்பு அரசறிவியல்(Political science) பாடப்புத்தகத்தில் மகாத்மா காந்தி, RSS, இந்து-முஸ்லீம் நல்லிணக்கம் பற்றிய வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக ஒரு பரபரப்பு தகவல் சமீபத்தில் வெளியானது. ராம நவமியின் போது இந்தியா முழுவதும் ஏற்பட்ட வகுப்புவாத மோதல்களுக்கு இடையில் இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது. புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் வரிகள்: 1. "காந்திஜியின் மரணம் நாட்டின் வகுப்புவாத சூழ்நிலையில் ஒரு மாயாஜால தாக்கத்தை ஏற்படுத்தியது." 2. "RSS [ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம்] போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட்டன" 3. "இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக காந்தி பாடுபட்டது இந்து தீவிரவாதிகளை தூண்டியது"
காந்தியின் கொலையில் RSSன் பங்கை மறைக்கும் முயற்சி: எம்பி பினோய் விஸ்வம்
சமீபத்தில் பீகார், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் நடந்த வன்முறைகள் இந்து-முஸ்லீம் சமூகங்களுக்கு இடையே புதிய சச்சரவைத் தூண்டியுள்ளது. இதற்கிடையில், பாடப்புத்தகத்தால் ஏற்பட்டிருக்கும் இந்த சர்ச்சையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு பாடத்திட்டத்தை ஒழுங்கமைக்கவில்லை என்று NCERT கூறியுள்ளது. மேலும் பாடத்திட்டம் ஜூன் 2022இல் தான் கடைசியாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, "12ஆம் வகுப்பு வரலாற்றிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடப்புத்தகம் நாதுராம் கோட்சேவின்(காந்தியை கொன்றவர்) கருத்தியல் சார்புகளை மறைக்கிறது. இதைப் பற்றிய குறிப்புகள் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டது, அந்த கொடூரமான செயலில் RSSன் பங்கை எதிர்கால சந்ததியினரிடமிருந்து மறைக்கும் முயற்சியே தவிர வேறில்லை." என்று எம்பி பினோய் விஸ்வம், மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.